“எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்

மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” – பாவேந்தர் பாரதிதாசன்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப் பட்ட அ.த.க. அமைப்பின் செயல்பாடுகள், படிப்படியாக பெருமளவில் வளர்ந்துவருகிறது. அந்த வளர்ச்சியால், தமிழ்ப்பள்ளிகள் மூலம் தமிழ்க்கல்வி செழித்தோங்கி வளர்கிறது. இந்த வளர்ச்சிபற்றி, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆண்டு விழா பொதுமேடையிலும், இணை அமர்விலும், ஆண்டுவிழா மலரிலும் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். அமெரிக்காவில் முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அ.த.க அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளிலும் கிளைகள் உண்டு. 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தன்னார்வலராக மாணவர்களுக்கான தமிழ்க்கல்விச் சேவையில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு புதிய இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்டில் உள்ள மொழியியல் அறிஞர்களின் உதவியுடன் மாணவர்களை மையப்படுத்தி பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. பாட புத்தகங்களோடு ஆசிரியர்களுக்கான கையேடு அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள வண்ணமயமான வரைபடங்கள் (posters) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்குவிளையாட்டு முறையில் (gamification of learning) கல்வியை கற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளைப் பற்றி அ.த.க. அமைப்பு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இரு மொழி முத்திரை பெற்றுள்ளார்கள். தமிழ்ப் பாடத்திற்கான மதிப்பீடு பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில்பெற்றுள்ளார்கள். ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கவும் அவர்களுடைய திறனை மேம்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழக தமிழ்த் துறைகளுடனும், American Council For Teaching Foreign Languages (ACTFL)  நிறுவனங்களுடன் அ.த.க. அமைப்பு பணியாற்றி வருகிறது.

மாணவர்கள் ஈடுபாட்டுடன் தமிழ் கற்கவும் (Active Learning), பள்ளி நிர்வாக மேலாண்மைக்கும் நவீன மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அ.த.க அமைப்பில் பதிவு செய்துகொண்ட பள்ளிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  உங்கள் பகுதியில் தமிழ்ப் பள்ளி துவங்கவேண்டுமானால், அல்லது இப்போது நடந்துகொண்டிருக்கும் உங்கள் தமிழ்ப்பள்ளி அ.த.க அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டுமானால் தொடர்புகொள்ளவேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் தமிழ்க்கல்வி வளர்க்கப் பாடுபடும் பல நல்லுள்ளங்கள் அ.த.க. அமைப்பில் பொறுப்பு வகிக்கிறார்கள். தன்னார்வலர்களாக பல தமிழ்க்கல்விப் பணிகளில் தம்மை அ.த.க. மூலம் ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரின் அனுபவமும், ஆற்றலும் உங்கள் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்.

”ஊர்கூடித்தான் தேர் இழுக்கமுடியும்” என்றொரு பழமொழி உண்டு. அமெரிக்காவில், தலைமுறை தலைமுறையாக தமிழ்மொழி பரவ, வளர நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட உங்களை அன்போடு அழைக்கிறோம்.

“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்”

– மாகவி பாரதியார்.

தமிழால் இணைவோம்! தலைமுறைக்கும் தொடர்வோம்!!