அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம்,
நலம், நாடுவதும் அதுவே!
வணக்கம்,
அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention) விவரங்கள் – டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு
1) மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள்
2)நெடுநாள் ஆசிரியர் விருது
3) ஆண்டுவிழா மலர்
அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழா (Virtual Convention): டிசம்பர்த் திங்கள் 11 மற்றும் 12 சனி மற்றும் ஞாயிறு
சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்ததுபோல அ.த.க-வின் மூன்றாம் ஆண்டுவிழாவினை சென்ற ஆண்டைப் போலவே மீண்டுமொரு மெய்நிகர் விழாவாக எதிர்வரும் டிசம்பர் 11-12 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நடத்த அ.த.க. திட்டமிட்டுள்ளது. அதனில் மாணக்கர்களது தமிழ்த்திறன் அறிதல், போட்டிகள், நெடுநாள் ஆசிரியர் விருது வழங்கல், ஆண்டுவிழா மலர் வெளியீடு மற்றும் கல்வியாளர்களது கருத்துரைகள் என தமிழ்க்கல்வி சார்ந்த விடயங்கள் இடம்பெறுவதுடன் புதியதாக ஆசிரியப் பெருமக்களுக்கான போட்டிகள் சிலவும் இடம்பெற இருக்கின்றன. இவ்விவரத்தினை தங்களது பள்ளிப் பெற்றோர்கள், மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைவருக்கும் தெரிவித்து அவர்தம் நாட்காட்டியில் டிசம்பர் 11-12 தேதிகளைக் குறித்துவைத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்வதுடன் போட்டிகள் மற்றும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க ஊக்கம் அளித்திட வேண்டுகிறோம்.
ஆண்டுவிழாவில் குறிப்பாக இடம்பெற இருப்பவைகள்:
1) மாணக்கர் மற்றும் ஆசிரியர் போட்டிகள் குறித்த விவரங்கள்:
நமது அ.த.க.வின் மூன்றாம் ஆண்டுவிழாவில் அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன், மாறுவேடப் போட்டி மற்றும் புதியதாக சுட்டிகளின் குட்டிக்கதைப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும்.
பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் பங்கேற்று அவர்கள்தம் திறமைதனை வெளிக்கொணரும் வகையிலும் மேலும் வெற்றியாளர்களாக சிறப்புப் பரிசுகளைப் பெறவும் ஊக்கம் அளிக்க வேண்டுகிறோம்.

இது குறித்த மேலதிக விவரங்கட்கு convention2021@americantamilacademy.org மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

2) நெடுநாள் ஆசிரியர் விருது:
நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற இரு ஆண்டுகளாக நெடுநாள் ஆசிரியர் விருதுகள் மற்றும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவிலும், ஏற்கனவே விருபெற்றவர்கள் தவிர்த்து மேலும் பலருக்கு விருது வழங்கி சிறப்பிக்க அ.த.க. விரும்புகிறது. தங்களது பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்களைக் கீழ்க்கண்ட வரையறைகளின்படி தேர்வு செய்து அவர்தம் விவரங்களை எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
• இதுவரை அதகவின் ஆசிரியர் விருதுகள் ஏதும் பெற்றிடாதவர்.
• குறைந்தது 5 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி வருபவர்.
• பள்ளியின் மொத்த மாணாக்கர்களின் அடிப்படையில் 50 மாணாக்கர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் விருதுகள் வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, தங்களது பள்ளியில் 110 மாணவர்கள் இருந்தால், தங்களது பள்ளியின் சார்பில் இரண்டு ஆசிரியர்கள் விருதுகள் பெற இயலும். இதுவரை அதகவின் ஆசிரியர் விருது பெறாத 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் இருவருக்கும் மேற்பட்டு இருப்பின், அதிகக் காலம் பணியாற்றிய அடிப்படையில் முதல் இருவரைத் தேர்வு செய்து விவரங்கள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
மெய்நிகர் ஆண்டு விழாவன்று ஆசிரியர் விவரங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள். விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் அஞ்சல் வாயிலாக வழங்கி மரியாதை செய்யப்படும்.
ஆசிரியர்கள் பற்றிய கீழ்க்காணும் விவரங்களை teacher.awards@AmericanTamilAcademy.org எனும் மின்முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
• ஆசிரியரது முழுப் பெயர்:
• பள்ளியின் பெயர்:
• ஆசிரியரது பணி ஆண்டுகள் எண்ணிக்கை:
• 2 அல்லது 3 வரிகளுக்கு மிகாத அவரைப் பற்றிய குறிப்பு/சிறப்பு:
• சான்றிதழ் மற்றும் பரிசு அனுப்பிவைக்க ஏதுவாக அவர்தம் இல்ல முகவரி:
எழுத்தறிவித்தவரை என்றென்றும் நினைவில் கொண்டு சிறப்புச் செய்வோம்.

இது குறித்த மேலதிக விவரங்கட்கு teacher.awards@AmericanTamilAcademy.org மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

3) ஆண்டு விழா மலர்:
நமது அ.த.க.வின் மூன்றாம் ஆண்டுவிழா மலரில் இடம்பெற தங்களது பள்ளிசார் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களது படைப்புகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. படைப்புகளை அனுப்புவதற்கான வரையறைகள் மற்றும் விவரங்கள் அடங்கிய தொகுப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழுக்குப் படையல் செய்வோம்! தமிழைப் போற்றி மகிழ்வோம்!!

இது குறித்த மேலதிக விவரங்கட்கு atamagazine@AmericanTamilAcademy.org மின்முகவரியில் தொடர்புகொள்ளவும்.

​எனவே, அ.த.க.வின் மூன்றாம் ஆண்டுவிழாவை மெய்நிகர் வாயிலாகக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

வருக!வருக!!அருந்தமிழ் பருக!!!

நன்றி,

கரு.மாணிக்கவாசகம்
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம்

www.AmericanTamilAcademy.org
American Tamil Academy
Non-Profit Organization under IRS code 501(c)(3)

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க்கல்வி!!